சமயத்தின் வெற்றி (#11331)

என் இறைவா, எவ்வாறு உமது அன்பர்கள் உமது உயிரினங்களிடையே உள்ள கிளர்ச்சிக்காரர்களாலும் உமது மக்களிடையே உள்ள கொடுமை இழைப்போராலும் சூழப்பட்டுள்ளனர் என்பதை நீர் பார்க்கின்றீர். உமது அன்பர்களின் புலம்பலும் உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அழுகுரலும் எழுப்பப்படாத எஞ்சியுள்ள நாடு எதுவுமே  கிடையாது. உமது ஆற்றல் என்னும் கரத்தினை உமது சக்தி என்னும் மார்பிலிருந்து வெளிக்கொணர்ந்து அதனைக் கொண்டு உம்மை நேசிப்போர் அனைவருக்கும் உதவிடுமாறு நான் உம்மை வேண்டிக் கொள்கின்றேன். 

என் இறைவா, அவர்களின் கண்கள் உந்தன்பால் திரும்பியுள்ளதையும், அவர்களின் பார்வை உமது பகலூற்று, அன்பு, கடாட்சம் ஆகியவற்றின் மீது பதிந்திருப்பதையும் நீர் பார்க்கின்றீர். என் பிரபுவே, அவர்களது இழிவை மகிமையாகவும், அவர்களின் ஏழ்மையை வளமாகவும், அவர்களின் பலமின்மையை உம்மிலிருந்து உதித்திடும் வலுவாகவும் மாற்றிடுவீராக. 

நீர் விரும்பியதைச் செய்யும் சக்தியுடையவர் நீரே. எல்லாம் அறிந்தவரும் சகலமும் அறிவிக்கப்பட்டவரும் உம்மையன்றி வேறெவருமிலர்.

-Bahá'u'lláh
-----------------------

சமயத்தின் வெற்றி (#11332)

பிரபுவே, என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகட்டும்! உமது மாட்சிமைமிகு வலிமை என்னும் நதியினைப் புலனாக்குவீராக; அதனால் உமது ஒருமை என்னும் நீர், அனைத்துப் பொருள்களின் மெய்ம்மையிலிருந்து அந்தளவு சுரந்தொழுகிடுமாக; அதனால் உமது தவறா வழிகாட்டுதல் என்னும் கொடி உமது கட்டளை என்னும் இராஜ்யத்தில் உயர ஏற்றப்பட்டு, தெய்வீகச் சுடரொளி வீசிடும் விண்மீன்கள் உமது மாட்சிமை என்னும் சுவர்க்கத்தினில் பிரகாசித்திடுமாக. உமக்கு விருப்பமானதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே. மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியரும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

சமயத்தின் வெற்றி (#11333)

என் இறைவா, உமது அருட்பொழிவுகள் என்னும் சுவர்க்கத்திலிருந்தும், உமது சலுகைகள் என்னும் பகல் நட்சத்திரத்திலிருந்தும் என்னைத் தடுத்திடாதீர். நீர் எதன் மூலம் அனைத்துப் புலனாகும் புலனாகா பொருள்களையும் ஆட்கொண்டுள்ளீரோ அத் திருமொழியின் மூலமாக என்னையும் உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரையும் உமது ஊழியர்கள் மத்தியிலும், உமது பிராந்தியங்கள் அனைத்திலும் உமது சமயத்தை மேன்மையுறச் செய்வதனைச் சாதித்திட உதவுமாறு உம்மை வேண்டிக் கொள்கின்றேன். எனவே, உமது திருநூலில் வழங்கியுள்ள ஒவ்வொரு நற்பொருளையும் எனக்கு விதித்திடுவீராக. மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், என்றும் மன்னிப்பவர், உதார குணமுடையவர்.

-Bahá'u'lláh
-----------------------

சமயத்தின் வெற்றி (#11334)

உமது கட்டளையின் சக்தியின் வழியாக, எல்லாப் படைப்புப் பொருள்களையும் உயிர்பெறச் செய்துள்ளவரான பிரபுவே, ஒளி உமக்கே உரியதாகுக.

பிரபுவே! உம்மைத் தவிர மற்றனைத்தையும் துறந்திட்டோருக்குத் துணைபுரிவீராக; ஒரு மாபெரும் வெற்றியை அவர்களுக்கு வழங்கிடுவீராக. அவர்களை ஆதரித்து, பலப்படுத்திடவும், அவர்கள் வெற்றியைச் சாதித்திட இயலச் செய்திடவும், அவர்களுக்கு ஊக்கமளித்திடவும், அவர்களுக்குப் புகழைப் பெற்றுத்தந்திடவும், அவர்கள் மீது பெரும் புகழும் மதிப்பும்  வந்தடைந்திடவும்,   அவர்களை வளமிக்கவராக்கிடவும், ஓர் அற்புதமான வெற்றியோடு அவர்களை வெற்றியாளராக்கிடவும், பிரபுவே, விண்ணிலும், மண்ணிலும், அவற்றுக்கிடையிலுமுள்ள  அனைத்திற்கும் தேவகணங்களின் படையைக் கீழே அனுப்பி, உமது ஊழியர்களுக்கு உதவிடுவீராக. 

விண்ணுலகங்களுக்கும் மண்ணுலகுக்கும் பிரபுவும், எல்லா  உலகங்களுக்குமே பிரபுவான நீரே, அவர்களின் பிரபு ஆவீர். பிரபுவே, இவ்வூழியர்களின் சக்தியைக் கொண்டு, இந்தச் சமயத்தைப் பலப்படுத்துவீராக; உலக மக்கள் அனைவருக்கும் மேலாக அவர்களை உயர்வுபெறச் செய்வீராக; ஏனெனில், உண்மையாகவே, அவர்கள்தாம் உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்திட்ட ஊழியர்கள் ஆவர். மெய்யாகவே, உண்மையான நம்பிக்கையாளர்களின் பாதுகாவலர் நீரே ஆவீர்.

பிரபுவே, உமது வென்றிடவியலாத இந்த சமயத்தின் மீதான விசுவாசம்  வாயிலாக, அவர்களின் இதயங்கள், விண்ணுலகங்களிலும், மண்ணுலகிலும், அவற்றுக்கு இடையேயுமுள்ள  எவையானாலும், அவற்றையும் விட அவர்களின் இதயங்கள், மேலும் வலுவானதாக வளர்ச்சியுற  அருள்வீராக. பிரபுவே, உமது அற்புதச் சக்தியின் சின்னங்களைக் கொண்டு, அவர்களின் கரங்களைப் பலப்படுத்துவீராக; அதனால், மனுக்குலம் அனைத்தின் பார்வை முன்னே உமது சக்தியை அவர்கள் வெளிப்படுத்தக்கூடும்.

-The Báb
-----------------------

சமயத்தின் வெற்றி (#11335)

பிரபுவே! உமது தெய்வீக ஒற்றுமை எனும் விருட்சம் துரிதமாக வளர்வதற்கு வழிவகுப்பீராக; ஆதலின், பிரபுவே, உமது  நல்விருப்பம் எனும் வழிந்தோடிடும் நீர்களைக் கொண்டு அதற்கு நீர் பாய்ச்சுவீராக; உமது தெய்வீக வாக்குறுதி எனும் வெளிப்பாடுகளின் முன், உந்தன் புகழுக்கும் மேன்மைக்கும் தகுந்த, நீர் விரும்பிய கனிகளை ஈன்றிடவும், உந்தன்  போற்றுதலுக்கும், நன்றிசெலுத்தலுக்கும் பொருந்தக்கூடிய , உமது நாமத்தை மேன்மைப்படுத்திடவும், உமது சாரத்தின் ஒருமையைப் புகழ்ந்திடவும், உம்மை ஆராதனைச் செய்திடவும், இயலச் செய்வீராக;  ஏனெனில், இவை அனைத்தும் மற்றெவரின் பிடிக்குள் அல்லாது உமது பிடிக்குள்ளேயே அடங்கியுள்ளன.

உமது உறுதிப்பாடெனும் விருட்சத்திற்கு நீரூட்டுவதற்காகவும், அதன் வழியாக உமது புனிதமான, மாற்றமுடியாத திருச்சொல்லை மேன்மைப்படுத்திடவும், நீர் தேர்ந்தெடுத்த குருதிக்கு உரியவர்கள் பெற்றிடும் ஆசிகள் மாபெரிதாகும்.

-The Báb
-----------------------

சமயத்தின் வெற்றி (#11336)

பிரபுவே! அவர்களுக்குத் தகுந்த வெற்றியை வழங்கி, உமது நாள்களில் உந்தன் பொறுமையான ஊழியர்களை வெற்றிப் பெற்றவர்களாக ஆக்கிடுவீராக; ஏனெனில் அவர்கள் உமது பாதையில் உயிர்த் தியாகத்தை நாடியுள்ளனர். அவர்களின் மனங்களுக்கு ஆறுதலையும், அவர்களின் உள்ளார்ந்த ஜீவனை மகிழ்வுறச் செய்யக் கூடியவற்றையும், அவர்களின் இதயங்களுக்கு நம்பிக்கையையும்,  அவர்களின் உடல்களுக்குச் சாந்தத்தை  வழங்கக்- கூடியவற்றையும், அவர்களின் ஆன்மாக்களை, அதி மேலான, இறைவனின் முன்னிலைக்கு உயர்த்திடவும், அதி விழுமிய சொர்க்கத்தையும், உண்மை அறிவும், பண்பும்முடைய மனிதர்களுக்காக நீர் விதித்திட்டப் பேரொளி எனும் ஓய்வில்லங்களை  அடைந்திட இயலச்   செய்யக்கூடியவற்றை  அவர்களுக்குத்  தந்தருள்-வீராக.  மெய்யாகவே, அனைத்தையும் நீர் அறிவீர், ஆனால் நாங்களோ உமது ஊழியர்களும், உமது அடிமைகளும், உமது கொத்தடிமைகளும், உமது வறியவர்களும் ஆவோம். கடவுளே, எங்கள் பிரபுவே, உம்மைத் தவிர வேறு இறைவனை நாங்கள் வேண்டியதில்லை; இம்மைக்கும் மறுமைக்குமான கருணைக் கடவுளானவரே, உம்மைத் தவிர வேறெவரிடமிருந்தும் நாங்கள் ஆசிகளுக்கோ, கிருபைகளுக்கோ மன்றாடியதில்லை.  நாங்கள் வெறும் வறுமை, இல்லாமை, ஆதரவின்மை, நரகம் ஆகியவற்றின் உருவகங்கள் ஆவோம்; ஆனால் உமது  முழு உருவே, செல்வம், சுதந்திரம், புகழ், மாட்சிமை, எல்லையற்ற கருணை ஆகியவற்றின் அடையாளமாகும்.

பிரபுவே, எங்களுக்குரிய வெகுமானத்தை, உமக்கு ஏற்றவாறு, இம்மைக்கும் மறுமைக்குமான  நன்மையாகவும், மேலுலகிலிருந்து கீழேயுள்ள பூமி வரை நீடிக்கும் எண்ணற்ற அருட்கொடைகளாகவும்  மாற்றிடுவீராக.

மெய்யாகவே, எங்கள் பிரபுவான நீரே, எல்லாப் பொருள்களின் பிரபுவும் ஆவீர். உம்மைச் சார்ந்த பொருள்களுக்காக ஏங்கியவாறு; உமது கரங்களுக்குள்ளேயே நாங்கள் சரணடைகிறோம்.

-The Báb
-----------------------

சமயத்தின் வெற்றி (#11337)

பிரபுவே! மண்ணுலக மக்கள் யாவரும் உமது சமயம் என்னும் சுவர்க்கத்தில் நுழைந்திட உதவி புரிவீராக, அதனால்,  உமது நல்விருப்பத்தின் வரம்புகளுக்கப்பால் எப் படைப்புப் பொருளுமே எஞ்சியிராது. 

நினைவிற்கு அப்பாற்பட்ட காலத்திலிருந்தே நீர் ஆற்றல் படைத்தவராகவும், நீர் விரும்புவன- வற்றிற்கெல்லாம் மேலானவராகவும் இருந்து வந்திருக்கின்றீர்.

-The Báb
-----------------------

சமயத்தின் வெற்றி (#11338)

கடவுளே, என் கடவுளே! அதிவுயரிய மலை உச்சியின் மீதுள்ள,  ‘கிழக்கையோ மேற்கையோ சார்ந்திராத’[1] திருவிருட்சமாகிய, புனித விருட்சத்தினுள் தெய்வீக அன்பெனும் தீயை மூட்டியமைக்காக நீர் போற்றப்படுவீராக.  அந்தத் தீயானது, அதன் சுடர் மேலுலக வான்படையை நோக்கி  உயரும் வரை எரிந்துள்ளது; அதிலிருந்து அந்த மெய்ம்மைகள் வழிகாட்டல் எனும் ஒளியைப் பெற்று, இவ்வாறு உரக்கக் கூவின: ‘மெய்யாகவே சைனாய் மலைச்சரிவின் மீது ஒரு தீயை நாங்கள் கண்ணுற்றோம்.’

கடவுளே, என் கடவுளே! அதன் அனல்வேகம் உலகின் மீதுள்ள அனைத்தையும் இயங்கச் செய்யும் வரை, நாளுக்கு நாள் இத்தீயை அதிகரிப்பீராக; என் பிரபுவானவரே! ஒவ்வோர்  இதயத்திலும் உமது  அன்பெனும் ஒளியை மூட்டுவீராக; உமது அறிவெனும் ஆற்றலை மனிதர்களின் இதயங்களுக்குள் ஊதியருள்வீராக; உமது ஒருமை எனும் வசனங்களைக் கொண்டு அவர்களின் நெஞ்சங்களை மகிழ்வுறச் செய்வீராக.  அவர்களின் கல்லறைகளுள் வசிப்போரை உயிர்பெறச் செய்வீராக; அகந்தையுடையோரை எச்சரிப்பீராக; மகிழ்ச்சியை உலகளாவியதாக ஆக்கிடுவீராக; உமது தெளிவான நீர்களைப் பொழிந்திடுவீராக; வெளிப்படையான பேரொளிகளின் கூட்டத்தில், ‘கற்பூர நீரூற்றில் திடப்படுத்தப்பட்ட’ கோப்பையை அனைவரோடும் பகிர்ந்துகொள்வீராக.

ெய்யாகவே, அளிப்பவரும், மன்னிப்பவரும், என்றும் வாரிவழங்குபவரும் நீரே ஆவீர். மெய்யாகவே கருணைமிக்கவரும், இரக்க-முடையவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

சமயத்தின் வெற்றி (#11339)

அவரே கடவுள்! 

பிரபுவே, எனதாண்டவரே, என் அதி அன்புக்குரியவரே! உமது குரலைக் கேட்டு, உமது திருவாக் கிற்குச் செவிசாய்த்து, உமது அழைப்புக்குக் கவனம் செலுத்திய உமது ஊழியர்கள் இவர்களே. அவர்கள் உம்மில் நம்பிக்கை வைத்துள்ளனர், உமது அற்புதங்களைக் கண்ணுற்றுள்ளனர், உமது நிரூபணத்தை உண்மையென ஏற்று உமது ஆதாரத்திற்குச் சாட்சியமளித்துள்ளனர். அவர்கள் உமது வழிகளில் நடந்துள்ளனர், உமது வழிகாட்டலைப் பின்பற்றியுள்ளனர், உமது மர்மங்களைக் கண்டு கொண்டுள்ளனர், உமது திருநூல், உமது சுருள்சுவடியின் வசனங்கள், உமது மடல்கள், உமது நிருபங்கள் ஆகியவற்றின் இரகசியங்களைப் புரிந்து கொண்டுள்ளனர். உமது ஆடையின் நுனியினைப் பற்றி, உமது அங்கி என்னும் ஒளியினையும் மாட்சிமையையும் இறுகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களின் காலடிகள் உமது ஒப்பந்தத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, அவர்களின் இதயங்கள் உமது சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பிரபுவே! அவர்களின் உள்ளங்களில் உமது தெய்வீக ஈர்ப்புயெனும் ஒளியை ஏற்றி, அன்பு, புரிந்துகொள்ளல் என்னும் பறவையை அவர்களின் நெஞ்சங்களில் பாடிடச் செய்வீராக. அவர்களைச் சக்திமிகு அடையாளங்களாகவும் ஒளிரும் விருதுக்- ்கொடிகளாகவும் உமது திருவாக்கைப் போன்று பரிபூரணமாகவும் ஆக்கிடுவீராக. அவர்கள் வாயிலாக உமது சமயத்தை உயர்வடையச் செய்து உமது கொடிகளை அவிழ்த்துப் பறக்கவிட்டு உமது அற்புதங்களை விரிவாகப் பிரகடனம் செய்வீராக. அவர்களைக் கொண்டு உமது திருவாக்கினை வெற்றிபெறச் செய்து உமது அன்பர்களின் இடைகளை உறுதிப்படுத்துவீராக. உமது நாமத்தினைப் புகழ்ந்திட அவர்களின் நாவுகளைத் தளர்த்தி, அவர்களுக்கு உமது புனித விருப்பம், மகிழ்ச்சி ஆகியவற்றினை நிறுவிட அருட்தூண்டல் அளித்திடுவீராக. உமது புனிதமெனும் இராஜ்யத்தில் அவர்களின் முகங்களை ஒளிரச் செய்து, அவர்களை உமது சமயத்தின் வெற்றிக்காக எழச் செய்வதன் வழி, அவர்களின் மகிழ்வினைப் பூரணமாக்குவீராக. 

பிரபுவே, நாங்கள் வலுக்குறைவானவர்கள், உமது புனிதத்தின் நறுமணங்களைப் பரப்பிட எங்களைப் பலப்படுத்துவீராக; ஏழைகள், உமது தெய்வீக ஒருமை யெனும் பொக்கிஷங்களிலிருந்து எங்களைச் செல்வந்தராக்குவீராக; ஆடையற்று இருக்கிறோம், எங்களுக்கு உமது வள்ளன்மை என்னும் அங்கியினை அணிவிப்பீராக; நாங்கள் பாவம் நிறைந்தவர்கள், உமது அருள், உமது சலுகை, உமது மன்னிப்பு ஆகியவற்றினால் எங்களின் பிழைகளைப் பொறுத்தருள்வீராக. மெய்யாகவே, நீரே தோழர் , உதவுபவர், கிருபையாளர், அருளாளர், வல்லவர், சக்தி மிக்கவர். 

திடமும், பற்றுறுதியும் உள்ளோர் மீது ஒளியுளெல்லாம் ஒளி இலயித்திடுமாக.

-`Abdu'l-Bahá
-----------------------

